பதிவு செய்த நாள்
29
நவ
2011
11:11
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ரூ.2.50 லட்சம் செலவில் அன்னதான கூடம் புதுப்பிக்கப்படுகிறது. மழையால், பொற்றாமரைக்குளத்தில் கற்கள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே அன்னதான கூடம் உள்ளது. இதன் சமையலறை கருங்கற்களானது. இதனால் கரப்பான் பூச்சி போன்ற பூச்சிகள் வலம் வர வசதியாக உள்ளது. இதை தவிர்க்க, சமையல் அறையும், அன்னதான மண்டபமும் ரூ.2.50 லட்சத்தில் கிரானைட் கற்கள் பதித்து புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இதற்கிடையே, பொற்றாமரைக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்கும் பணி ரூ.25 லட்சம் செலவில் நடக்கிறது. முதற்கட்டமாக, குளத்தின் கருங்கற்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. தொடர் மழையால், இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ""ஓரிரு நாட்களில் பணி மீண்டும் ஆரம்பித்து, திட்டமிட்டப்படி, மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்படும், என்கின்றனர் கோயில் அதிகாரி.
பார்க்கிங் வசதி எப்படி: மதுரை வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு, எல்லீஸ்நகரில் உள்ள கோயில் இடம் தற்காலிக கட்டண "பார்க்கிங்காக மாற்றப்பட்டது. தொடர் மழையால், இந்த இடம் சகதி காடாக மாறியதால், வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் இதழில், நவ.,26 அன்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, "பார்க்கிங் இடத்தை சீரமைத்து, மணல் கொட்டி பழைய நிலைக்கு கோயில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. விரைவில், தேவையான அடிப்படை வசதிகள் இங்கு ஏற்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.