பதிவு செய்த நாள்
29
நவ
2011
11:11
தண்ணீர் வசதி இல்லாததால், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயிலை நிறுத்தி, ஆந்திர மாநில அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கார்த்திகை மாதம் பிறந்தது முதலே, இந்தியா முழுவதும் இருந்து, அய்யப்ப பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சபரிமலை செல்லத் துவங்கி விட்டனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலம், தன்பாத்திலிருந்து தினமும் ஆலப்புழைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் செல்கிறது. சேலம், ஈரோடு வழியாக தினமும் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரயிலில் ஆந்திர மாநில பக்தர்கள் அதிகளவில் பயணித்தனர்.
காலை, 9 மணிக்கு சேலம் ரயில் நிலையம் வரும், இந்த எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, 55 நிமிடம் தாமதமாக, சேலம் ஜங்ஷன் வந்தது. ரயிலில் உள்ள கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால், அதிருப்தியடைந்த அய்யப்ப பக்தர்கள், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், பக்தர்களை சமாதானம் செய்தனர்.
ஸ்டேஷனில் இருந்த துணை ஸ்டேஷன் மாஸ்டர் மனோஜ்குமார், ""தினமும், ரயிலில் வரும் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே ரயிலில் இருக்கும் நீரை பயன்படுத்தி விடுகின்றனர். அதனால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஈரோடு வரை பொறுத்துக் கொள்ளுங்கள். அங்கு தண்ணீர் நிரப்பப்படும், என்று கூறினார். அதனால், அய்யப்ப பக்தர்கள் சமாதானமடைந்து ரயிலில் ஏறினர். அதன் பின், 10.15 மணிக்கு சேலம் ஜங்ஷனில் இருந்து ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில், தாமதமாக காலை, 11.05க்கு ஈரோடு சென்றடைந்தது. ஈரோட்டில் ரயில் நின்றதும், பிளாட்பாரத்தில் இறங்கிய இவர்கள், "ரயிலில் தண்ணீர் இல்லை. நாற்றத்துடன் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என, கோரி திடீரென, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டேஷன் மாஸ்டர் ராஜன், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அனில், ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பக்தர்களை சமாதானம் செய்து, ரயிலை புறப்படும் படி சைகை கொடுத்தனர். ரயில் புறப்பட்டதும், அய்யப்ப பக்தர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். தொடர்ந்து மூன்று முறை ரயில் புறப்படுவதும், பக்தர்கள் அபாய சங்கிலியை பிடித்து இழுப்பதுமாக போராட்டம் தொடர்ந்தது.
எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அய்யப்ப பக்தர்கள் கேட்கவில்லை. அவர்களுடன் மற்ற பயணிகளும், சேர்ந்து கொண்டனர். அதிகாரிகளுடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஸ்டேஷன் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.ரயிலில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்யவும், ரயிலில் தண்ணீர் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 50 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. பக்தர்கள் அல்லாத பயணிகள் கூறுகையில், "இந்த ரயிலில் ஆயிரக்கணக்கில் அய்யப்ப பக்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும் இதே மாதிரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தண்ணீர் நிரப்பினால், சிறிது நேரத்தில் தண்ணீரை காலி செய்து விடுகின்றனர். பின், தண்ணீர் நிரப்ப வேண்டும் என்ற போராட்டத்தால், எங்கள் பயணம் மிகவும் தாமதமாகிறது என்றனர்.