பதிவு செய்த நாள்
29
நவ
2011
11:11
ஈரோடு: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், முடி காணிக்கைக்கு, 50 ரூபாய் வசூலிக்கப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பிரபலமான ஆன்மிக சுற்றுலாத் தலங்களில் பவானி சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிகின்றனர். தினமும் பல்வேறு தோஷங்கள் கழிக்கவும், பித்ரு தர்ப்பணம், திதி காரியம் செய்யவும், பரிகாரங்கள் செய்யவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பவானி கூடுதுறையில் பக்தர்கள் குவிகின்றனர். வேண்டுதலுக்காகவும், முடி காணிக்கை செய்வோருக்கும், திதிக்காக மொட்டை அடிப்பவருக்கும் ஏதுவாக, கோவில் வளாகத்துக்குள் முடி காணிக்கை செய்ய வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், ஐந்து பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, முடி காணிக்கை செய்ய வரும் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கின்றனர். மொட்டை அடிக்க 10 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், சங்கமேஸ்வரர் கோவிலில் முடி காணிக்கைக்கு, 50 ரூபாயும், சவரம் செய்ய, 30 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. "பொதுவாக கோவிலில் முடி காணிக்கை செய்ய குறைவான பணமே வசூலிக்கப்படும். ஆனால், சங்கமேஸ்வரர் கோவிலில், சலூன் கடைக்கு நிகராக பணம் வாங்கப்படுவது கண்டிக்கதக்கது. கோவில் நிர்வாகமும் இக்கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியது என, பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கோவில் நிர்வாக அலுவலர் நடராஜ் கூறுகையில், ""முடி காணிக்கைக்கு 10 ரூபாய் மட்டுமே வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேல் வசூலிப்பதாக, பக்தர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. முடி காணிக்கைக்கு அதிகமான தொகை வசூலிக்கப்பட்டால், நிர்வாகத்தில் பக்தர்கள் புகார் செய்யலாம். அதிக தொகையை வசூலிப்பவர்கள் மீது, கோவில் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும், என்றார்.