பதிவு செய்த நாள்
29
நவ
2011
11:11
ஊட்டி : ஊட்டி எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு வினாயகர் வழிபாடு, மகா கணபதி, லட்சுமி, சுதர்சன, நவக்கிரக ஹோமங்களுடன் துவங்கியது. நேற்று காலை ஊட்டி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை வாத்தியங்கள் முழங்க பிரதான கலசம் முளைப்பாளிகையுடன் எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி கோவிலை அடைந்தது. மாலை 3.00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 4.00 மணிக்கு முதல் கால யாக பூஜையை கோவை பேரூர் இளையபட்டம் மருதாச்சல அடிகளார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். செயல் அலுவலர் நாகராஜ் முன்னிலை வகித்தார். நாளை காலை 6.30 மணிக்கு வேததிருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நாடிசந்தானம், 4ம் கால வேள்வி, திரவிய சமர்ப்பணம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.05 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 9.45 மணிக்கு விமான கலச மகா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேம், மகா அபிஷேகம், அலங்காரம், தச தரிசனம், மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கல், காலை 11.00 மணிக்கு அன்னதானம், மாலை 3.00 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், மகா கும்பாபிஷேக குழுவினர், திருப்பணி உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.