உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2017 11:08
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சதுர்த்தி விழா ஆக.16 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் எட்டாம் நாளில் சித்தி, புத்தி தேவியருடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து திருமணக் கோலத்தில் விநாயகர் இரு தேவியருடன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மறு நாள் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று சதுர்த்தி தீர்த்தவாரியை முன்னிட்டு உப்பூர் மோர்பண்ணை கடலில் பக்தர்களுடன் விநாயகர் புனித நீராடினார். அதைத்தொடர்ந்து, காலை 10:05 மணிக்கு கடற்கரையில் இருந்து சதுர்த்தி தீர்த்தவாரியுடன் விநாயகர் வெள்ளி சப்தாவர்ணம் ( காளை வாகனம்) வாகனத்தில் பக்தர்களுடன் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தார்.
அதைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் கோயில் முன்பு பால்குடம் மற்றும் காவடியுடன் தீ மிதித்து நேர்த்தி கடன் நிறைவேற்றினர். விழாவில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மகேந்திரன், திருவாடானை பொறுப்பாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வ.து.ந.ஆனந்த், வி.ஏ.ஓ., சங்க முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், கடலுார் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், சித்துார்வாடி முன்னாள் ஊராட்சி தலைவர் வாசுதேவன், உப்பூர் குமரையா அம்பலம், டோனி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி நிர்வாகி முனியாண்டி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.