பதிவு செய்த நாள்
02
செப்
2017
01:09
ஆத்தூர்: பச்சியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், காளை மாடு உள்பட, 30 பேர் அக்னி குண்டத்தில் இறங்கினர். ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் பச்சியம்மன், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. கடந்த, 24ல், 28வது ஆண்டு அக்னி திருவிழாவையொட்டி காப்பு கட்டும் விழா நடந்தது. நேற்று முன்தினம், பச்சியம்மன் சித்தநாதீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான, தீ மிதி திருவிழா நேற்று மாலை, 6:00 மணியளவில் நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட கோவில் காளை மாடு, அக்னி சட்டி தலையில் சுமந்து பூசாரி, குழந்தைகளுடன் தம்பதியர் உள்பட, 30க்கும் மேற்பட்டோர், அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.