பதிவு செய்த நாள்
02
செப்
2017
02:09
சென்னிமலை: கிழக்கு புதுப்பாளையம் கன்னிமார் சுவாமி கோவிலில், 108 வலம்புரி சங்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. சென்னிமலை - அரச்சலூர் சாலையில், கிழக்கு புதுப்பாளையத்தில் கன்னிமார் சுவாமி, கருப்பண சாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆவணி மாதம், மூன்று நாட்கள் திருவிழா, கூட்டு வழிபாடு நடக்கும். நடப்பாண்டு விழா, நேற்று காலை தொடங்கியது. மூலஸ்தான இடத்தில் பூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி ஹோமம், 108 திருவிளக்கு பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜை, கோமாதா பூஜைகள் நடந்தன. இன்று காலை, கன்னிமார் சுவாமிக்கு தங்க நகை மற்றும் வெள்ளி கவசத்துடன் தீபாராதனை நடக்கிறது. காலை, 10:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், கோவை, நீலகிரி மாவட்ட பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்பர். இதற்காக சென்னிமலையில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை காலை, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், விழா நிறைவு பெறுகிறது.