பதிவு செய்த நாள்
26
செப்
2017
01:09
ஊத்துக்கோட்டை: திருமலை பிரம்மோற்சவ விழாவிற்கு கலந்து கொள்ள வந்த, திருக்குடைகள், ஊத்துக்கோட்டை வழியாக சுருட்டப்பள்ளியை அடைந்தன. அப்போது, மழை பெய்ததால், திருக்குடையை மழை வரவேற்றது என, பொதுமக்கள் பக்தியுடன் தெரிவித்தனர். திருநின்றவூர் பகுதியில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும், திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் திருக்குடையுடன் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். இந்தாண்டு, கடந்த, 23ம் தேதி, காலை, 8:00 மணிக்கு திருக்குடைகளுடன் யாத்திரை கிளம்பியது. அங்கிருந்து, கொமக்கம்பேடு, வடமதுரை, பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி வழியாக நேற்றுமுன்தினம் மாலை, ஊத்துக்கோட்டையை அடைந்தது. நேற்றுமுன்தினம், மாலை, 5:00 மணிக்கு, ஊத்துக்கோட்டையை அடைந்தபோது, திடீரென மழை பெய்தது. இதைக்கண்ட பக்தர்கள், திருக்குடையை மழை வரவேற்கிறது என பக்தியுடன் தெரிவித்தனர். திருக்குடையை தொடர்ந்து சிறுவர், சிறுமியரின் பாடல்களுடன், உற்சவர் வெங்கடேசஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, சுருட்டப்பள்ளியை அடைந்த திருக்குடை யாத்திரை, நேற்று நின்ற கிராமத்திலும், மறுநாள், நாராணவனம், திருச்சானுார் அடையும். பின், 27ம் தேதி, காலை, திருக்குடைகள் மலயப்ப சுவாமிக்கு சமர்ப்பிக்கப்படும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருக்குடையுடன் சென்றனர்.