கும்பகோணம்: நாச்சியார்கோவில் வீரமாகாளியம்மன் கோவிலில் தைமாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு இருப்பதால் திருப்பணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. சிறப்புமிக்க இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 15 ஆண்டுக்கும் மேலாகிறது. கிராமவாசிகள் கூடி வீரமாகாளியம்மன்கோவிலை விஸ்தரிப்பு செய்து திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த கடந்த ஆண்டில் முடிவு செய்து திருப்பணிக்கமிட்டி அமைத்தனர். திருப்பணிக்கமிட்டி தலைவராக சண்முகம், உறுப்பினர்களாக கலியபெருமாள், தண்டாயுதபாணி, தனராமன், ஆனந்தராமன், வெங்கடேசன், சுப்ரமணியன், நடராஜன், குருமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீவிரமாக கிராமவாசிகள் ஒத்துழைப்புடன் உபயதாரர்கள் மூலமாக 12 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய திட்டமிட்டு பணி நடந்து வருகிறது. 75 சதவீத பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் வருகிற தை மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் திருப்பணி வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.