பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
பழநி: முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா இன்று(அக்.,20’ காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. பழநி மலைக்கோவிலில் இன்று உச்சிக்காலத்தில் காப்புக் கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி, 26 வரை நடக்கிறது. அக்., 25ல் சூரன் வதத்தை முன்னிட்டு, அதிகாலை, 4:00 மணிக்கு மலைக்கோவில் நடை திறக்கப்படும். மாலை, 5:30 மணிக்கு நடக்க வேண்டிய சாய்ரட்சை பூஜை, மதியம் 1:30 மணிக்கு நடக்கும். அசுரர்களை வதம்புரிய மலைக்கொழுந்து அம்மனிடம், சின்னக்குமாரசுவாமி வேல் வாங்கிய உடன், மதியம், 2:30 மணிக்கு நடை சாத்தப்படும். இதனால் அன்று இரவு, 7:00 மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோவிலில் இருந்து முத்துக் குமாரசுவாமி, வள்ளி தேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வார்.
அசுர வதம்:திருஆவினன்குடி கோவிலில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்து மாலை, 6:00 மணிக்கு வடக்குகிரி வீதியில் தாரகாசூரன் வதம், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதம், தெற்குகிரி வீதியில் சிங்கமுகாசூரன் வதம், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதம் நடக்கிறது.
திருக்கல்யாணம்: மலைக்கோவிலில், 26 காலை, 10:45 மணிக்கு சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், பெரியநாயகியம்மன் கோவிலில் இரவு, 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.