திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பாரம்பரியத்துக்கான யுனெஸ்கோ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையானது. இக்கோயிலுக்கு ஐ.நா., சபையின் கீழ் செயல்படும் உலகின் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனெஸ்கோவின் சார்பில் ஆசிய- பசிபிக் மெரிட் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சர்வதேச நிதி உதவியுடன் பழமை மாறாமல் புதுப்பித்து 2015ல் திருப்பணி செய்ததன் அடிப்படையில் விருதுக்கு தேர்வாகியுள்ளது. இவ்விருது பெறும் முதல் தமிழக கோயில் என்ற பெருமை பெறுகிறது.
கலாசார மரபுகளைப் பாதுகாக்க, பாரம்பரிய கட்டடங்களை மீட்டெடுக்க மற்றும் பராமரித்து வருபவர்களை ஊக்குவிக்க, ஆண்டுதோறும், யுனெஸ்கோ போட்டிகளை நடத்துகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கட்டமாக நடத்தப்படுகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட பாரம்பரிய விருது போட்டிக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஈரான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளிலிருந்து 43 பாரம்பரிய கட்டடங்கள் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. இதில் 31 கட்டடங்கள் பழைமை வாய்ந்தது என்ற பிரிவிலும், 12 கட்டடங்கள் புதிய வடிவமைப்புகளைக் கொண்டது என்ற பிரிவிலும் இடம்பெற்றிருந்தது. இவற்றில் 16 கட்டடங்கள் இந்த ஆண்டுக்கான பாரம்பரிய விருதுகளைப் பெற்றுள்ளன.ஆசிய பசிபிக் மெரிட் பிரிவில் இந்தியாவில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில், மும்பையின் ராயல் பாம்பே ஒபுரா ஹவுஸ் மற்றும் கிறைஸ்ட் சர்ச் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.