பதிவு செய்த நாள்
11
நவ
2017
11:11
வேடசந்துார்: வேடசந்துாரில் இருந்து கோவிலுார் செல்லும் ரோட்டில் உள்ளது வெள்ளயகவுண்டனுார். இப்பகுதி பள்ளியப்பநாயக்கர் ஜமீன்’ என்பவரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. அப்போது 96 -பாளையப்பட்டுகளில் கூவக்காபட்டியும் ஒன்று. இங்கு தற்போதுள்ள முனியப்பசுவாமி கோயிலுக்கு பின்புறம்தான் ஜமீன் வாழ்ந்ததற்கான கட்டட சுவடுகள் உள்ளன.
அதற்கு முன் ஒரு பிளாஷ் பேக்’: வடக்கே பெல்லாரி தேச ஜமீன் ஒருவர், தனது பணியாள் சாம்புகன் ஒருவனை தரக்குறைவாக நடத்தினாராம். கோபம் கொண்ட சாம்புகன், மூட்டை முடிச்சுகளுடன் எருமைக்கிடா மீது ஏறி வெள்ளையகவுண்டனுார் வந்தாராம்.. அவருடன் அங்கிருந்த முனியப்பனும் வந்துள்ளார். அப்போது வெள்ளையகவுண்டனுார் ஜமீன் பள்ளியப்பநாயக்கர் வரி வசூல் செய்து கட்ட முடியாததால், அவரை கோனுார் சிறையில் வைத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த சாம்புகன், ஜமீனை சந்தித்து அவர் கட்டவேண்டிய தொகையை செலுத்தி வெளியே கொண்டு வந்துள்ளார். இதனால் சாம்புகனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கூவக்காபட்டி, உசிலம்பட்டி, அம்மாபட்டி, நத்தப்பட்டி ஊராட்சிகளில் சேவகம் செய்யும் உரிமையை வழங்கியுள்ளார். சாம்புகனுக்கு துணையாக வந்த முனி’யப்பனை, தனது பங்களா முன் காவலுக்கு வைத்தார். அந்த முனியப்பனே இன்று ஸ்ரீ முனியப்பனாக சுற்றுப்பகுதி மக்களின் பாதுகாவலனாக உள்ளார்.
இந்த கோயிலில் வேண்டியது வேண்டியபடி நடக்கும் என்பது காலகாலமான நம்பிக்கை. இக்கோயில் திருவிழா நான்கு ஊரட்சிகளின் மக்களிடம் வரிவசூல் செய்துதான் நடக்கும். கோயில் இன்றும் சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்வேயப்பட்ட நிலையில்தான் உள்ளது. இங்கு வேண்டுதல் செய்யும் பக்தர்கள், வேல்’ மற்றும் ஆட்டுக்கிடாயுடன் தான் வருவர். இதனால் இக்கோயிலைச் சுற்றிலும் 5 ஆயிரக்கும் மேற்பட்ட வேல்கள் உள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது. கூவக்காபட்டி ஜமீன் ராஜேந்திரன் கூறியதாவது: நுாறு ஆண்டுகளுக்கும் மேலான இக்கோயிலில், முனியப்பசுவாமி சக்தி வாய்ந்த தெய்வமாக உள்ளார். கோயிலுக்கு கட்டடம் கட்ட சயனம்’ கேட்டும் கிடைக்கவில்லை. இதனால் வேல் கம்புகளே அரணாக உள்ளது, என்றார். இவரை தொடர்பு கொள்ள: 99423 10359.