பதிவு செய்த நாள்
11
நவ
2017
06:11
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மதுரகவி சுவாமிகளின், 113வது அத்யயன மகோற்சவம் நடந்தது. மதுரகவி சுவாமிகளின், 113வது அத்யயன மகோற்சவத்தை முன்னிட்டு, நந்தவனத்தில், கோஷ்டி பஜனையும், அங்குள்ள சுவாமிகளின் திருவரசுக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனையும் நடந்தது.
இது குறித்து, மதுரகவி சுவாமிகளின் திருநந்தவனம் டிரஸ்டி ஜெயரட்சகன் கூறியதாவது: திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த 1846ம் ஆண்டு அவதரித்த மதுரகவி சுவாமிகள், 1904ம் ஆண்டு, நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின் போது, 7 ம் நாள் பரமபதித்தார். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், 12 கலசங்களுக்கும், பத்மத்திற்கும் தங்கத் தகடு பதித்து கொடுத்த சுவாமிகள், தனது பூர்வீக சொத்து முழுமையும், நந்தவனத்துக்கு கொடுத்ததோடு, பிற பாகவதர்கள் உதவியுடன் நந்தவனத்தை சுற்றியுள்ள நிலங்களை வாங்கி சேர்த்து, டிரஸ்டியையும் நிறுவினார். அதன் மூலம், பல்வேறு கைங்கர்யங்கள் மேற்கொள்ளப்படுகிறது. திருச்சி, மாம்பழச்சாலையில் இருந்து, அம்மாமண்டபம் செல்லும் சாலையில் உள்ள மதுரகவி சுவாமிகளின் நந்தவனத்தில் மலர்ந்துள்ள மலர்களை கொண்டு மாலைகள் தொடுத்து, தினமும் பெருமாளுக்கும், தாயாருக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அவர் பரமபதமடைந்த நாளில், இந்த நந்தவனத்தில், சிறப்பு கோஷ்டி பஜனையும், ரெங்கநாதர் கோவிலில் கருட மண்டபத்தில் இருந்து, ஊஞ்சல் மண்டபம் வரை புஷ்ப அலங்காரம் செய்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.