தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில், முருகப்பெருமானை அருணகிரிநாதர் “தீபமங்களஜோதீ நமோநம” என்று திருப்புகழில் பாடுகிறார். வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் இருந்த நெய்யை குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டதால், அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள், கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் ஆகியவை ஏற்றுவர். சொக்கப்பனை கொளுத்துவர். அக்னியைப் போல் ஒளி வீசும் சிவனையும், முருகனையும் போற்றவே இத்தீபங்கள் ஏற்றப்படுகின்றன.