சபரிமலை: புல்மேடு பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வனகாவலர்களின் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக வரும் பாதையில் யானை கூட்டம் இறங்கியுள்ளது. தகவல் அறிந்து வனகாவலர்கள் யானைகளை வனப்பகுதிக்கு அனுப்புகின்றனர். இதனால் பக்தர்களை புல்மேடு பாதையில் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சத்திரம், சீதைக்குளம், சீரோபாயின்ட், தாவளம், உப்புபாறை, உரக்குழி ஆகிய இடங்களில் வனகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து தகவல் வந்த பின்னர்தான் பக்தர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப் படுகின்றனர். யானைகளை காணும் போது அலைபேசிகளில் படம் எடுக்க முயலும் போது ஆபத்தும் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் கவனமாக அப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதையில் வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் வனத்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.