சென்னிமலை: சென்னிமலை, ஐயப்பன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம், முதல் ஞாயிற்றுக் கிழமை அன்று, பால் அபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள், கோவிலில் இருந்து பால் குடங்களுடன் புறப்பட்டு செண்ட மேள தாளங்களுடன், சென்னிமலையில் நான்கு ராஜ வீதிகளில் ஊர்வலம் சென்றனர். பிறகு மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு, ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு, ஐயப்பனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.