பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த என்னும் ஆறு காண்டங்களைக் கொண்டது ராமாயணம். இதில் சுந்தர காண்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. சுந்தரம் என்றால் அழகு. தன் மனைவியாகிய சீதாதேவியைப் பிரிந்து வருந்திய ராமபிரானுக்கு அனுமன் மூலம் நல்ல செய்தி சுந்தரகாண்டத்தில் தான் கிடைத்தது. அசோகவனத்தில் தனிமையில் வாடிய சீதை,கருணையே உருவான ராமச்சந்திர மூர்த்தி உன்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்று காதில் தேன் பாயச் செய்தது இதில் தான். இப்பகுதி ராமாயணத்திலேயே மந்திரத் தன்மை கொண்டதாகும். வாழ்வில் எந்த துன்பம் வந்தாலும் உடனுக்குடன் பலன் தரத்தக்க மந்திர துதி இது. சீதையின் துன்பத்தைப் போக்க அனுமன் வந்ததைப் போல, சுந்தரகாண்டம் பாராயணம் செய்பவர்களின் துன்பத்தைப் போக்கவும் அனுமன் ஓடிவருவார். அவரது திருவடியில் சரண் புகுந்தால் என்றும் நமக்கு பயமில்லை.