பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நாளை (31ம் தேதி) மார்கழி மாத, 16ம் நாள் வழிபாடாக, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்பானே! என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில் பழம்பெருமை மிக்கது. மார்கழி 30 நாட்களும் பக்தர்கள் அதிகாலை திருப்பாவை பாடுகின்றனர். பாகவத கோஷ்டியினரின் சிறப்பு பஜனையும் நடந்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் பிரமோற்சவ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
இக்கோவிலில் நாளை திருப்பாவையின், 16ம் பாடலான, நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோவில் காப்பானே என்ற பாடலை பக்தர்கள் பாடுகின்றனர்.
ஒவ்வொரு பெருமாள் கோவிலும், பெருமாள் வீற்றிருக்கும் நுழைவாயில் முன்புறம் ஜெயன், விஜயன் என்ற இருவர், துவாரபாலகர்களாக காவலுக்கு நிற்பர். பெருமாளை வழிபட அவர்களிடம் அனுமதி பெறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.
நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட
வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக, இந்த மாளிகை கதவை திறப்பாயாக; மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன், எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.
அதை பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்து இருக்கிறோம்; அவனைத் துயில் எழுப்பும் பாடல் களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என, உன் வாயால் சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை திறப்பாயாக என்பதே, இப்பாடலின் பொருளாகும்.