சபரிமலை: பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள ஐயப்பனின் திருவாபரணத்தை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருவாபரண பவனியில் வரும் மன்னர் பிரதிநிதியாக ராஜராஜவர்மா தேர்வு செய்யப்பட்டார். சுவாமி ஐயப்பனை எடுத்து வளர்த்தவர் பந்தளம் மன்னர். ஐயப்பன் சபரிமலையில் அடைக்கலம் கொண்ட பின் ஐயப்பனை காண வந்த பந்தளம் மன்னர், அவருக்கு திருவாபரணங்களையும் கொண்டு வந்தார். இந்த ஆபரணங்கள் பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மகரவிளக்கு நாளின் இரண்டு நாள் முன் திருவாபரணங்கள் பந்தளத்தில் இருந்து பவனியாக புறப்படும். இந்த பவனியில் பந்தளம் மன்னரின் பிரதிநிதியாக அந்த குடும்பத்தில் இருந்து ஒருவர் வருவார். இந்த ஆண்டு பிரதிநிதியாக ராஜராஜவர்மா தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரண பவனி புறப்பட்டதும், இவரை பக்தர்கள் பல்லக்கில் துாக்கி வருவர். வரும் 12-ம் தேதி திருவாபரண பவனி புறப்படுகிறது. மகரவிளக்கு காலம் முடிந்து இவரது முன்னிலையில்தான் நடை அடைக்கப்படும். பந்தளம் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ள திருவாபரணங்களை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும்.