மதுரை: மதுரையில் நெஞ்சுக்கோர் உபதேசம் என்ற தலைப்பில் நடந்த சொற்பொழிவில் சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: இறைவனை அறியும் கருவி மனம். அது எதை சிந்திக்கிறதோ, அதுவாகவே ஆகும் தன்மை உடையது. எனவே, இறைவனை தியானிப்பதே மேலான சாதனை. கடவுளை சிந்திக்க சிந்திக்க மனம் இறைத் தன்மையில் கரைந்து விடும். எவ்வாறு காந்தம் இரும்பை ஈர்த்துக்கொள்ளுமோ அவ்வாறே இறைவன் நம் மனதை ஆட்கொள்வார். இறை நாமம் என்பது நெருப்பை போன்றது. இந்த வெப்பம் நம் வினைகளை முழுமையாக அழித்து விடும். மாறக்கூடிய இன்பம், துன்பம் இருக்கும் உலக வாழ்க்கையில் ஆதாரமாக மாறாத இறைவனே இருக்கிறார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை "நினைமின் மனமே, நினைமின் மனமே," என்று பட்டினத்தார் பாடுகிறார், என்றார்.