மதுரை : மதுரை சத்குரு சங்கீத சமாஜத்தின் 66து ஆண்டு இசை விழாவில் நேற்று பாம்பே ஜெயஸ்ரீயின் கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டு கச்சேரி நடந்தது. இசை உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ள ஜெயஸ்ரீ சிறந்த குரல் இசை வித்தகராக இருப்பதை இந்த கச்சேரியும் நிரூபித்தது. முதல் பாடலாக மதுரை மீனாட்சி மீது நாட்டை ராகத்தில் சரசிருகாசன ப்ரியே... என்று தொடங்கும் சமஸ்கிருத கீர்த்தனை ஆதிதாளத்தில் நல்ல ஆரம்பத்தை தந்தது. தொடர்ந்து, தியாகராஜரின் கல்யாண வசந்த ராகக்கிருதி, ரூபக தாளத்தில் தெலுங்கு மொழியின் அழகு நாதமாக, கீதமாக தவழ்ந்து வந்தது.
அடுத்து, மங்களகரமாக ஆனந்த பைரவி ராக ஆலாபனை நேர்த்தியாக பாடி அனைவரின் நெஞ்சத்தை ஜெயஸ்ரீ கவர்ந்தார். வயலின் வாசித்த ஸ்ரீகாந்த் சுஸ்வரமான வாசிப்பை தந்து கைத்தட்டலை பெற்றார். சியாமள சாஸ்திரியின் மரிவேரே திக்கெவரம்மா... என்ற மிஸ்ர சாப்பு தாள க்ருதியில் அம்மாள் துதியாக இசை வழியாக மனதை வருடியது. சிட்டஸ்வரமும், ஸ்வரசாகித்தியமும் கிருதியை அழகுபடுத்த கற்பனா ஸ்வரங்களும் கச்சேரிக்கு மெருகூட்டின. தொடர்ந்து, முத்துசாமி தீட்சிதர் இயற்றிய சந்தான கோபால கிருஷ்ணம் மத்தியம கால சாகித்தியங்குளுடன் விறுவிறுப்பை தந்தது. அடுத்து, கல்யாண ராக ஆலாபனையை ஜெயஸ்ரீ மூன்று ஸ்தாயிகளில் வழங்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். கல்யாணி ராகத்தில் தியாகராஜரின் ஆதிதாள கீர்த்தனை ஏதா வுன்னரா பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. கீதா கவுரி வாகீஸ்வரி என்ற வரிகளை நிரவல் செய்த ஜெயஸ்ரீ, ராக பாவத்துடன் மிளிர செய்தார். மிருதங்கம் வாசித்த டில்லி சாய்ராம், லய விந்நியாசத்தில் தனி இடம் பிடித்தார். கடம் வாசித்த கிருஷ்ணா சுநாத வாசிப்பை வெளிப்படுத்த சிறந்த இசை அரங்காக அமைந்து ஞாயிறு மாலைப் பொழுதை இசை மயமாக்கியது.