பதிவு செய்த நாள்
10
ஜன
2018
11:01
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர்கோயிலில் உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி சுவாமி படியளக்கும் லீலை கொண்டாடப்பட்டது. சிவன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நேற்று மார்கழி அஷ்டமி திதி என்பதால் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்குப்பின் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை செய்யப்பட்டு ரிஷப வாகனத்தில் சோமநாதர் பிரியாவிடையுடனும், ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளி உலா வந்த போது பக்தர்கள் ஜீவராசிகளுக்கு உணவளிக்கும் வகையில் அரிசி, நவதானியங்களை துாவியபடி சென்றனர்.பலர் இதனை பிரசாதமாக எடுத்துச் சென்றனர். சிறப்பு பூஜைகளை அழகியசுந்தரபட்டர், தெய்வசிகாமணிபட்டர் தலைமையில் சண்முகசுந்தரபட்டர், மணிக்குமார்பட்டர், சோமாஸ்கந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.
தேவகோட்டை: தேவகோட்டையில் மீனாட்சிசுந்தரேஸ்வரர் , மற்றும் மீனாட்சி அம்மன், விநாயகர், முருகன், சன்டிகேஸ்வரர் உட்பட சர்வ அலங்காரத்தில் நகர முக்கிய வீதிகளில் வலம் வந்து படிஅளக்கும் நிகழ்ச்சி நடந்தது. தேவார,திருவாசகம் பாடல்கள் பாடிய படி உலா வந்த சுவாமிகள் கோயிலை வந்தடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் நடந்தன.
காரைக்குடி: காரைக்குடி நகர சிவன் கோயிலிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் அம்பாள் சகிதம் சகல ஜீவராசிகளுக்கும் படியளக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி, அம்பாள், அம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகன் ஆகியோர் கோயிலிலிருந்து புறப்பட்டு சி.மெ.வீதி, பெருமாள் கோயில் வீதி, கீழ ஊரணி, எஸ்.ஆர்.எம்., வீதி, மேல மடம், தேரோடும் வீதி வழியாக கொப்புடையம்மன் கோயிலை சென்றடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. மாலையில் புறப்பட்ட சுவாமிகள் முத்தாலம்மன் கோயில் வழியாக நகர சிவன் கோயிலை வந்தடைந்தனர். வழி நெடுகிலும் பக்தர்களுக்கு சுவாமி படியளந்த அரிசி வழங்கப்பட்டது. பக்தர்கள் பட்டாடை சார்த்தி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். ஏற்பாடுகளை காரைக்குடி நகர சிவன் கோயில் டிரஸ்டிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.