பதிவு செய்த நாள்
21
டிச
2011
10:12
ஓமலூர் : ஓமலூர் அருகே, ஆறு ஆண்டாக பூட்டிக்கிடந்த கோவில், உயர்நீதிமன்ற உத்தரவால் விரைவில் திறந்து, வழிபாடு நடத்தப்பட உள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தாலுகா, பொம்மியம்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவில் பரம்பரை பூசாரியாக ராமசாமி இருந்தார். கடந்த 2003ல், கோவில் திருவிழாவின் போது, திடீரென மழை கொட்டியது. வழக்கமாக, கோவில் வெளிபிரகாரத்தில் இருந்து வழிப்படும் ஒரு பிரிவினர், மழை காரணமாக, உள் பிரகாரத்துக்குள் சென்று வழிபட்டுள்ளனர். இதற்கு, மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பிரச்னையை கிளப்பினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக, பூசாரி ராமசாமி பேசியதால், மோதல் வலுத்தது. அதனால், கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. அப்போதைய மேட்டூர் ஆர்.டி.ஒ., விசாரணைக்கு சென்று, நிலுவையில் இருந்தது. இந்நிலையில், பரம்பரை பூசாரிக்கு எதிராக, சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனருக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, அதுவும் கிடப்பில் போடப்பட்டது. அதே நேரத்தில், பூசாரி ராமசாமி, கோவிலில் நள்ளிரவில் தனி ஆளாக பூஜை செய்துள்ளார். சூன்யம் வைப்பதாக பூசாரி மீது பழிசுமத்தி, பொதுமக்கள் அவரை தாக்கியுள்ளனர். அதனால், 2005ல், மாரியம்மன் கோவில் இழுத்து பூட்டப்பட்டது. இந்நிலையில், ஊர்மக்கள் மேல்முறையீடு செய்த மனுவை, சென்னை ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கடந்த ஜனவரி 11ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதன் பேரில், மேட்டூர் ஆர்.டி.ஓ., விசாரணையும் ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, ஓமலூர் தாலூகா ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் இந்திரா, ஆறு ஆண்டாக பூட்டிக்கிடந்த கோவிலை, கடந்த மே 17ம் தேதி திறந்தார். பாதிக்கப்பட்ட பிரிவினர், கோவிலுக்குள் வந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு, மற்ற சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் பிரச்னையை கிளப்பினர். ஓமலூர் தாசில்தார் தலைமையில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீவட்டிப்பட்டி போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். திறக்கப்பட்ட கோவில் அன்று மாலையே இழுத்து பூட்டப்பட்டது. இது தொடர்பாக, பரம்பரை பூசாரி ராமசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் "ரிட் மனு தாக்கல் செய்தார். இதில், தாசில்தார், வி.ஏ.ஒ., ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர், எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு, விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், "ஆறு வாரத்துக்குள் கோவிலை திறந்து வழிபாடு நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது. அதை தொடர்ந்து, கிராமத்தில், மூன்றுமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஊருக்குள் தண்டோரா போட்டு, வீடு வீடாக சென்று, கோவிலை திறக்க ஒப்புதல் கோரப்பட்டது. பொம்மியம்பட்டி ஊராட்சி தலைவர் குணசேகரன் தலைமையில், ஊர்மக்கள் ஒருங்கிணைந்து, கோவிலை திறக்க ஆதரவு தெரிவித்து எழுதிக்கொடுத்தனர். அதனால், ஆகம விதிப்படி கோவிலை திறந்து, வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.