கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து காவடி குழுவினர் நேற்று முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் மார்கழி மாதத்தில் இருந்தே காவடி குழுவினர் மாலை அணிந்து, விரதமிருந்து ஒவ்வொரு ஆண்டும் காவடி எடுத்துக் கொண்டு முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு, விரதம் இருந்த காவடிக்குழுவினர், நேற்று காலை, 6:00 மணிக்கு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலை கிரிவலம் வந்தனர். பின், பாத யாத்திரையை துவக்கி, பொள்ளாச்சி - கோவை ரோடு செக்போஸ்ட் சென்று, அங்கிருந்து சிங்கையன்புதுார் அய்யப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். அங்கு , பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்பின், சொக்கனுார் வழியாக முத்துக்கவுண்டனுார் முத்து மலை முருகன் மலை கோவிலை அடைந்தனர். முருகனுக்கு சிறப்பு அபிேஷக பூஜை , சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை காவடி குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்தனர்.