பதிவு செய்த நாள்
24
ஜன
2018
01:01
திருவாரூர்: பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பாள் சமேத மேகநாதசுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூரில் அமைந்துள்ளது,லலிதாம்பாள் சமேத மேகநாதசுவாமி கோவில். இக்கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நடப்பு ஆண்டு, இவ்விழா கடந்த, 15ம் தேதி துவங்கியது. அன்று, துவஜாரோஹணம், திக்பந்தனம் நடைபெற்றது. கடந்த, 16ம் தேதி முதல், 20ம் தேதி வரை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது; 20ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு, 9:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடந்தது. கடந்த, 22ம் தேதி பிற்பகல், 2:00 மணிக்கு, குதிரை வாகன புறப்பாடும், மாலை, 5:00 மணிக்கு, தேருக்கு மேகநாதர், லலிதாம்பாள் சுவாமிகளும் எழுந்தருளினர். அன்று இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 11:10 மணிக்கு, தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாகுறிச்சி ஆதீனகர்த்தர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிகபரமாசாரிய சுவாமிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். தேர், கீழவீதியில் இருந்து புறப்பட்டு, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக வலம் வந்து, நிலைக்கு வந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவில் தேர், 42 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக செய்யப்பட்டு, 150 ஆண்டுகளுக்கு பின், தேரோட்டம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.