பதிவு செய்த நாள்
24
ஜன
2018
02:01
சுதந்திர இந்தியாவிற்குப் பின், உருவ அமைப்புகள் பொறிக்கப்பட்டுள்ள, பிரபலமானவர்களின் நினைவுகூரும் நாணயங்கள் மிகக்குறைவாகத்தான் வெளி வருகின்றன. அதிலும், கடவுள் உருவம் பொறிக்கப்பட்டு உள்ள நாணயங்கள் வெளி வருவது மிகமிக குறைவு எனலாம். ஆனால், மன்னர் காலங்களில் வெளியிடப்பட்டுள்ள நாணயங்களில் பெரும்பாலானவை, கடவுள் உருவம் தாங்கப் பெற்றுள்ளதாகவே கிடைத்துள்ளது. தென்னிந்தியாவில் தான், இறை சிந்தனைகளுக்கும், ஆன்மிகத்திற்கும் அதிக முக்கியத்துவம், நாணயங்களின் வாயிலாக வெளிக்கொணர்வதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆற்றுப்படுகைகள் : தங்கத்தை மையமாகக் கொண்ட வாணிபமும், பொருளாதாரமும், நிலைத்தன்மையோடும், சீராகவும் இருப்பதற்காக, விஜயநகர பேரரசு, தங்க உலோகத்தில், கடவுள் உருவங்களை அதிக அளவில் பயன்படுத்தினர் என்ற செய்தியும், நாணய ஆராய்ச்சியாளர்கள் மூலம் கிடைத்துள்ளது. நாம் படத்தில் காணும் நரசிம்மர் உருவம் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்கள் அனைத்தும், நம் தமிழக ஆற்றுப்படுகைகளில் கிடைத்தது தான். விஷ்ணு புராணத்தில், பக்த பிரகலாதனின் வே ண்டுதலுக்கிணங்கி, மிகப்பெரிய துாணைப் பிளந்து, காட்சியளிக்கிறார் நரசிம்மர். ஹிரண்யகசிபு, பிரம்மனிடம் எப்படி சூழ்ச்சியாக வரம் பெற்றானோ, அதேபோல், திட்டம் தீட்டி, மனித உடம்பும், சிங்க தலையும் பெற்ற உருவ அமைப்போடு, கூரிய நகங்களுடன் அவதரிக்கிறார் நரசிம்மர். மேலும், இரவும், பகலும் அற்ற அந்தி வேளையில் வீட்டிற்கு உள்ளும், வெளியும் இல்லாமல் நில வாயிற்படியில், பூமியும், ஆகாயமும் அற்ற, அவர் மடியிலே வைத்து, எவ்வித ஆயுதங்களும் இல்லாமல்,-அவரின் கூரிய நகங்களால், ஹிரண்யகசிபுவை குத்திக் கிழித்து, பலியிட்டார் என்கிறது, நம் புராணம். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும், நம் பிற்கால மன்னர்கள் வெளியிட்டுள்ள நாணயங்களின் மூலம், நாம் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. கொங்கு நாட்டில் கிடைக்கப் பெற்ற இடைக்காலச் சேரர் நாணயங்களின் வட்ட வடிவிலான புடைப்பு கோடுகளால், நரசிம்மரின் தியான நிலை அமையப் பெற்றுள்ளது. காசின் பின்புறத்தில் வில்லும், பனை மரமும், நடுவில் புடைப்பு நரசிம்மரும் உள்ளன.
அனுமனின் பற்று : கி.பி., 1529-ல் தொடரப்பட்ட மதுரை நாயக்கர் காசுகளிலும், நரசிம்மரின் பல்வேறு உருவ அமைப்புகள் வெளி வந்துள்ளன. கிட்டத்தட்ட, 200 ஆண்டு களுக்கு மேல் தொடரபட்ட நாயக்க வரலாற்றில் நரசிம்மர், பக்த பிரகலாதன், ஹிரண்யகசிபு மற்றும் லட்சுமி நரசிம்மர் உள்ளிட்ட கதாபாத்திரங்களில், நாணயங்கள் நிரம்ப கிடைத்துள்ளன. அனுமன், நரசிம்மரை வணங்குவது போலவும் நாணயங்கள் உள்ளன. நரசிம்மரின் மீது, அனுமனின் பற்றை நாம் இங்கே காண முடிகிறது. மேலும், தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோவிந்தா நாணயமும், மராட்டியர்கள் வெளியிட்ட மகராசு நாணயமும், நரசிம்மரின் உருவமைப்போடு வெளி வந்திருப்பது, தமிழ் மொழிக்கு கொடுத்திருக்கும் முக்கியத்துவமாகவும் கருதலாம்.எது எப்படி இருந்தாலும், நாணயங்களின் மூலம் ஆன்மிக உணர்வையும், இறை சிந்தனையும், நம் மன்னர்கள் வளர்க்க தவறவில்லை என்று தான் சொல்லலாம்.
தொகுப்பு: கெத்துடா சேனலின் நிறுவனர் மற்றும் பயிற்சியாளர் என்.மணிகண்டன், சென்னை.