பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
காரைக்குடி:தைப்பூச விழாவை முன்னிட்டு நகரத்தார் பழநி பாதயாத்திரை குழுவினர் காரைக்குடி மற்றும் தேவகோட்டையில் காவடியுடன் நகர்வலம் வந்தனர்.
தைப்பூசத்தின்போது செட்டிநாட்டு நகரத்தார் பழநிக்கு பாதயாத்திரை செல்வதை தங்கள் வாழ்வின் முக்கிய கடமையாக கருதுகின்றனர். பழநிக்கு பாதயாத்திரையாக செல்பவர்கள், அதே பாத யாத்திரையாக திரும்பி வருவதால் 20 நாட்கள் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.
நேற்று காலை காரைக்குடி நகர சிவன்கோயிலில் காவடி கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 3:00 மணியளவில் அரோகரா கோஷம் முழங்க 71 காவடி நகர் வலம் வந்தது. இரவில் கொப்புடையம்மன் கோயிலில் காவடி இறக்கி வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு காரைக்குடி, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், கண்டனுார், கோட்டையூர், தேவகோட்டை, மானகிரி, ஆறாவயல், கல்லுப்பட்டி, சொக்கனேந்தல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த காவடி குன்றக்குடியை வந்தடையும். அங்கிருந்து நாளை காலை பல்வேறு ஊர்களை சேர்ந்த காவடியும் ஒருங்கிணைந்து ரத்தினவேலுடன் புறப்பட்டு செல்கிறது. நாளை இரவு கண்டவராயன்பட்டி மருதிப்பட்டி, 26-ம் தேதி சிங்கம்புணரி மணப்பச்சேரி சமுத்திராபட்டி, 27-ம் தேதி நத்தம் உப்பார் இடைச்சி மடத்திலும், 28-ம் தேதி திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் செம்மடைப்பட்டி ஊஞ்சலிலும், 29-ம் தேதி கலிங்கப்பையா ஊரணியிலும், 30-ம் தேதி பழநி அன்னதான மடத்திலும் மகேஸ்வர பூஜை நடக்கிறது. 31-ம் தேதி தைப்பூசத்தன்று பழநி அன்னதான மடத்தில் இரண்டாம் நாள் பூஜை நடக்கிறது. பிப்.2-ம் தேதி காவடி செலுத்துதல் நடக்கிறது. பிப்.5-ம் தேதி சந்தனகுழம்பு அபிஷேகம் நடக்கிறது. 6-ம் தேதி ஊர் திரும்பி, 11-ம் தேதி பாதயாத்திரையாக காரைக்குடியை வந்தடைகின்றனர். அரண்மனை பொங்கல் வகையறா, கண்டனுார் சாமியாடி வகையறா, கலிங்கப்பையா வகையறாக்கள் தலைமையில் காவடிகள் அணிவகுத்து செல்கிறது.