பதிவு செய்த நாள்
25
ஜன
2018
01:01
பொங்கலூர் : பொங்கலூர் அலகுமலை கைலாசநாதர் கோவிலில் நடந்த, வலுப்பூரம்மன் கோவில் தேரோட்டத்தை, ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். பொங்கலூர் அலகுமலை கைலாசநாதர் கோவிலில் உள்ள அம்மன், வலுப்பூரம்மனாக காட்சியளிக்கிறார். வலுப்பூரம்மன் கோவில் தைப்பூசத் திருவிழா, கடந்த, 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, காப்புக் கட்டுதல், மகா அபிஷேகம், தீபாராதனை, வலுப்பூரம்மன் கோவிலில் இருந்து, அலகுமலை ரத வீதிக்கு அம்மன் திருவீதியுலா, சிறப்பு பூஜைகள் நடந்தன. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி, நேற்று பிற்பகல், 3:15 மணிக்கு துவங்கியது. தேரோட்டத்தை, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப்ரமணி ஆகியோர், வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை தரிசித்தனர். மாலை, 5:15 மணியளவில், தேர், நிலையை அடைந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். வலுப்பூரம்மன் கோவில் திருப்பணிக்குழு தலைவர் சிதம்பரம், செயல் அலுவலர் தீபா, தக்கார் செல்வம் பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.