பதிவு செய்த நாள்
27
ஜன
2018
04:01
சென்னை : இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள கோவில்களில் 13 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், சுவாமியின் வாகனங்கள், வஸ்திரங்கள் சுத்தம் செய்தல், பூஜை பொருள்கள் துலக்குதல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகள் நடைபெறும். இதுவரை 192 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது.
இந்த உழவாரப்பணியில் 400க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் குடும்பத்துடன் கலந்து கொள்கிறார்கள். திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம். 28.1.2018 ஞாயிறன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் மற்றும் அடி அண்ணாமலை திருக்கோயிலில் 193வது உழவாரப்பணி நடைபெற இருக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி. அத்துடன் திருக்கோயில் சுற்றியுள்ள மக்களிடையே திருக்கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருமுறை ஈசனை சுமந்து, அடியார்கள் புடைசூழ திருக்கோயில்களின் துõய்மை-நலன்-பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவீதிவுலா நடைபெறும். மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல். தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு. அதன்பின் அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்படுவார்கள்.
தொடர்புக்கு: எஸ். கணேசன், நிறுவனர், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம், மொபைல்: 9840123866.