பதிவு செய்த நாள்
30
ஜன
2018
11:01
திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோவில், நாளை, 12 மணிநேர மூடப்படவுள்ளது. மேலும், அனைத்து முதன்மை தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. நாளை மாலை, 5:18 மணி முதல், இரவு, 8:41 வரை, சந்திர கிரகணம் நடக்க உள்ளது. கிரகணம் துவங்குவதற்கு ஆறு மணிநேரத்திற்கு முன், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சார்ந்த கோவில்கள் அனைத்தும் மூடப்படும்.
தரிசனம் ரத்து : அதன்படி, நாளை காலை, 11:00 முதல், இரவு, 9:30 மணி வரை, திருமலை ஏழுமலையான் கோவில், திருச்சானுார் பத்மாவதி தாயார், கோவிந்தராஜஸ்வாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. நாளை, 12 மணிநேரம் கோவில்கள் மூடப்பட உள்ளதை தொடர்ந்து, அன்று தேவஸ்தானம், 300 ரூபாய் விரைவு தரிசனம், திவ்ய தரிசனம், கைக் குழந்தைகளின் பெற்றோர், மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கான தரிசனங்களை ரத்து செய்துள்ளது. மேலும், வி.ஐ.பி., பிரேக் தரிசனம், ஆர்ஜித சேவைகளான சகஸ்ர கலசா பிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அன்று, புரோட்டோகால் வி.ஐ.பி.,களுக்கு மட்டுமே, ஏழுமலையான் தரிசனம் வழங்கப்படும். அன்னதான கூடமும், சந்திர கிரகணத்தை ஒட்டி மூடப்பட உள்ளதால், காத்திருப்பு அறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதும் ரத்து செய்யப்படும்.
நடை திறப்பு : கிரகணம் முடிந்த பின் இரவு, 9:30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின் இரவு, 10:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரகணம் அன்று, ஐந்து மணிநேரம் மட்டுமே ஏழுமலையான் கோவில் திறந்திருக்கும் என்பதால், பக்தர்கள் தங்கள் பயணத்தை முடிவு செய்யும்படி, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.