பதிவு செய்த நாள்
31
ஜன
2018
12:01
உடுமலை: உடுமலை, சுற்றுப்பகுதி கிராமங்களில், குளிர் வீசும் பனியிலும், தைப்பூசத்திருநாளை வரவேற்க, பெண்கள் கும்மிக்கொட்டி நிலாச்சோறு படைத்தனர். கிராமங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது முதல், பெண் குழந்தைகளாய் இருந்தால் அவர்கள் பூப்பெய்வது, திருமணம் என பல சடங்குகளில், பெண்களின் கும்மியும், குலவை சத்தமும் கட்டாயம் இருக்கும். ஆனால், அவசர வாழ்க்கையில், இதுபோன்ற கிராமிய வழக்கங்கள் மிக குறைந்து, சில கிராமங்களில் மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில், விழாக்கள் மட்டுமின்றி, தைத்திருநாள் துவங்கியது முதல், பொங்கல் அதன் பின்பு பூசம் என பெண்களின் கும்மியாட்டத்தை காணலாம்.
நிலா பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்வு: தைப்பூச திருநாளையொட்டி, கொடிக்கட்டு முதல், பூசம் வரை ஒன்பது நாளும், கிராமங்களில், சில வழிபாடுகளையும் வழக்கங்களையும் பின்பற்றுகின்றனர். அதில் ஒன்று, நிலாப்பிள்ளைக்கு சோறு மாற்றும் நிகழ்ச்சி. கிராமங்களில், ஒரு பொது இடத்தை தேர்வு செய்துகொள்கின்றனர். இவ்விடத்தை துாய்மைப்படுத்தி, அங்கு சப்பரம் வரைந்து வாழைத்தோரணம் கட்டி, பிள்ளையார் பிடித்து, வழிபாடு துவங்குகிறது. பெண்களும், குழந்தைகள் மட்டுமே இவ்வழிபாட்டில் பங்கேற்கின்றனர். ஒன்பது நாளும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும், அவரவர் செய்த உணவுகளை எடுத்து வந்து, அந்த வழிபாட்டில் வைத்து விட வேண்டும்.வழிபாடு முடிந்ததும், பெண்கள் கூடி முருகன் பாடல்களை பாடி, சப்பரத்தை சுற்றி கும்மிகொட்டுகின்றனர்.திருமணமாகாத பெண்கள் நல்ல கணவர் வரவேண்டும், திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியம் பெற வேண்டும், வாழ்க்கை சிறக்க வேண்டும் என வேண்டுதல்களை மனதில் நினைத்து, கும்மிகொட்டுகின்றனர். டிவி சீரியல்களில் முடங்கும் பெண்களுக்கு, இதுபோன்ற வழிபாடுகள், உடல்நலத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதுடன், மனதையும் லேசாக்குகிறது. பல வீடுகளிலிருந்தும் வந்து, வெளியுலகத்தை பார்த்து ரசித்து ஒன்று கூடி விளையாடும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கிடைக்கிறது.