பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு பழநி முருகன்கோயிலில் வழக்கமாக மாலையில் நடக்கும் தேரோட்டம், சந்திரகிரகணத்தால் காலையில் நடந்தது. பழநி முருகன்கோயில் தைப்பூசவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.,25 துவங்கி பிப்.,3 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்றுமுன்தினம் இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. நேற்று ரதவீதியில் காலை 10:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருத்தேரேற்றம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. காலை 10:40 மணிக்கு, நான்கு ரதவீதிகளில் தேரோட்டம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு தேர்நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். தைப்பூசவிழாவில் இன்று இரவு 8:00 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா நடக்கிறது. பிப்.,3 இரவு 7:00 மணி தெப்ப உற்சவத்துடன் தைப்பூசவிழா முடிகிறது. தேரோட்டத்தில் சித்தனாதன் சிவனேசன், வடக்குகிரிவீதி கந்தவிலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிகரமுத்து, சரவண பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் பங்கேற்றனர்.
கஸ்துாரியை தேடிய பக்தர்கள் : பழநி கோயில் யானை கஸ்துாரி, கோவை புத்துணர்வு முகாமிற்கு சென்றுள்ளது. அதற்கு பதிலாக பழநி கோயில் கல்லுாரி என்.என்.எஸ்., என்.சி.சி., மாணவர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன் தேரோட்டம் நடந்தது. மாரியம்மன் கோயில் அருகே மேடான பகுதிகளில் தேரை நகர்த்த பக்தர்கள் சிரமப்பட்டனர். கஸ்துாரி யானை இருந்தால் தேரை தள்ளிவிடும்.
அறுபது ஆண்டுக்குப்பின் : ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோயிலில் மாலை 4:00 மணிக்கு நடக்கும். இந்ததாண்டு தைப்பூச நாளின் மாலையில் சந்திரகிரகணம் ஏற்பட்டதால், தேரோட்டம் காலையில் மாற்றப்பட்டது. இதே போல 60ஆண்டுகளுக்கு முன் காலையில் தேரோட்டம் நடந்தது.