பதிவு செய்த நாள்
01
பிப்
2018
12:02
திருவள்ளூர்: தைப்பூசத் திருவிழா, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர். திருத்தணி, முருகன் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப் பெருமானுக்கு, பால், பன்னீர், இளநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சாய்ரட்சை அபிஷேகம் நடந்தது. பிற்பகல், 1:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், குதிரை வாகனத்தில் மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள், இரண்டு மணி நேரமும், 25, 100 மற்றும் 150 ரூபாய் சிறப்பு தரிசனத்தில், ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். தைப்பூசத்தையொட்டி, சில பக்தர்கள் மலர், மயில் காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை தரிசித்தனர். மேலும், சில பக்தர்கள் மொட்டை அடித்தும், உடல் மற்றும் வாயில் அலகு குத்தியும், பால்குடம் ஏந்தியும் முருகப் பெருமானை வழிபட்டனர்.
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி, பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று, முருகனை வழிபட்டனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நேற்று காலை, 500 பக்தர்கள் சிறுவாபுரி முருகனுக்கு, காவடி மற்றும் பால்குடம் எடுத்தனர். அதை தொடர்ந்து, எம்பெருமான் முருகனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முத்து அங்கி அலங்காரத்தில், பக்தர்களுக்கு முருகன் அருள்பாலித்தார். பக்தர்கள் குவிந்ததால், இரண்டு மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை வழிபட்டனர். கும்மிடிப்பூண்டியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத ஞானவேல் முருகன் கோவிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. சிறப்பு மலர் அலங்காரத்தில் முருகன் அருள்பாலித்தார்.
பொன்னேரி: பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் கிராமத்தில், திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையாரின் நினைவு இல்லம் உள்ளது. நினைவு இல்லத்தில், சத்திய தரும சாலை, ஞானசபையுடன் அமைக்கப்பட்டு, தினமும் ஏழை எளியோருக்கு காலையில் கஞ்சி வார்த்தலும், பகலில் பசியாற்றுவித்தலும் நடைபெறுகிறது. தைப்பூச திருநாளை முன்னிட்டு, நேற்று, காலை, 6:00 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல்பாராயணம் ஓதுதலுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. காலை, 7:00 மணிக்கு கஞ்சி வார்த்தல், காலை, 8:00 மணி முதல், சன்மார்க்க கொடி உயர்த்துதல், சன்மார்க்க பேருரை ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. தைப்பூச விழாவில், சின்னகாவணம், பெரிய காவணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மெய்யன்பர்கள் பங்கேற்று, ஜோதி தரிசனம் பெற்று சென்றனர். பகல், 12:30 மணிக்கு பசியாற்றுவித்தல் நடந்தது. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபையிலும், திருஅருட்பா ஓதுதல், சொற்பொழிவு ஆகியவை சிறப்பாக நடந்தன.
திருத்தணி: திருத்தணி, பெரியார் நகரில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் கோவிலில், ஜோதி தரிசனம் நடந்தது. இதையொட்டி, காலை, 7:30 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்தப்பட்டு, காலை, 8:00 மணிக்கு, தீப ஆராதனையும், அகவல் பாராயணம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடந்தது. அப்போது அங்கு கூடியிருந்த, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அருப்பெரும்ஜோதி, அருப்பெரும் ஜோதி என, முழக்கமிட்டனர். பின், பக்தர்கள் ஜோதி தரிசனத்தை கண்டு மகிழ்ந்தனர். பிற்பகல், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பஜனை மற்றும் பக்தி பாடல்கள் பாடப்பட்டன. மாலை, 7:00 மணிக்கு, மகா தீபாராதனை நடந்தது.
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில், தைப்பூசத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வள்ளலாருக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள, வள்ளி, தேவசேனா சமேத முருக பெருமானுக்கு, தைப்பூசத்தை முன்னிட்டு, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளலாருக்கும் பூஜை நடந்தது. ஜெயா நகர் விஸ்தரிப்பு, மகா வல்லப கணபதி கோவிலில், முருக பெருமானுக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. தைப்பூச அபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.