ராமேஸ்வரம் கோயிலில் புதிய தீர்த்த கிணறு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02பிப் 2018 11:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் இடையூறாக உள்ள 6 தீர்த்த கிணறுக்கு பதிலாக, புதிய கிணறுகள் தோண்டும் பணி துவங்கியது.
ராமேஸ்வரம் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தினமும் ஏராளமான பக்தர்கள் வருவதால் நெரிசலில் அவதிப்படுகின்றனர். நெரிசல் நாட்களில் 1 முதல் 6 தீர்த்த கிணறுகளை( மகாலட்சுமி, காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதி, சங்கு, சக்கர தீர்த்தம்) கோயில் நிர்வாகம் மூடிவிடுவதால், 16 தீர்த்தங்களில் மட்டும் நீராடி விட்டு பக்தர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இதனை தவிர்க்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, 6 தீர்த்த கிணறுக்கு பதிலாக கோயிலுக்குள் இடையூறு இல்லாத 2ம் பிரகாரத்தில் புதிய கிணறு அமைக்க 27.10.17 அன்று பூமி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் புதிய கிணறு தோண்டும் பணி துவங்கியது. ரூபாய் 30 லட்சம் செலவில் புதிய தீர்த்த கிணறு, அதனை சுற்றி டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணி ஓரிரு மாதங்களில் பணி முடிந்ததும், வடக்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் நீராடி வெளியேறலாம் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.