பதிவு செய்த நாள்
03
பிப்
2018
12:02
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில், பழுதடைந்த கோவில்களை சீரமைப்பது குறித்து, அதிகாரிகள் நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்கள் ஏராளமாக உள்ளன.கடந்த ஆண்டுகளில், பிரசித்தி பெற்ற சில கோவில்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. இவற்றை, சீரமைத்து பராமரிக்க வேண்டும் என, பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதையடுத்து, சாலவாக்கம், பிரசன்ன வெங்கடேச பெருமாள்; அழிசூர் அருளாளீஸ்வரர் மற்றும் வெங்கச்சேரி, கடம்பநாதர் சுவாமி கோவில்களில், இந்து அறநிலையத் துறை வேலுார் உதவிக்கோட்ட பொறியாளர், டி.கல்யாணசுந்தரம் மற்றும் அந்தந்த கோவில் நிர்வாக அலுவலர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர், நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து, உத்திரமேரூர் ஒன்றிய அறநிலையத் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ’பழுதடைந்த கோவில்களை சீரமைக்க, மதிப்பீடு தயார் செய்வதற்காக, ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அவர்களின் பரிந்துரைக்கு பின், புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்’ என்றார்.