பதிவு செய்த நாள்
05
பிப்
2018
02:02
திருப்பூர் :திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சண்டிகேஸ்வர நாயனாருக்கு குரு பூஜை விழா நேற்று நடந்தது.சோழநாட்டின் மணியாற்றின் கரையில், சேய்ஞலுார் எனும் ஊரில், எச்சத்தன்-பவித்ரை தம்பதியருக்கு, விசாரசருமா மகனாக பிறந்தார். சிறு வயது முதல் சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வழிபட்டார். மாடு மேய்க்கும் பொறுப்பை ஏற்ற அவர், மாடுகளின் பாலை கறந்து, மணலில் செய்த லிங்கத்துக்கு, தினமும் அபிேஷகம் செய்து வழிபட்டு வந்தார். தனது தந்தை கண்டித்த பின்னும், மாட்டுப்பாலில் சிவனுக்கு அபிேஷகம் செய்வதை விடாமல் செய்துவந்தார். இதையறிந்த விசாரசருமாவின் தந்தை அங்கு வந்து, கலசத்தில் இருந்த பாலை காலால் உதைத்து தள்ளினார். பால் அனைத்தும் வீணானது.
அபிேஷக பாலை உதைத்தால் கோபமான விசாரசருமா, அங்கிருந்த கம்பை எடுத்து தந்தையை நோக்கி வீசினார். கம்பு மழுவாக மாறி, தந்தையின் கால்களை வெட்டியது. அதை கண்டுகொள்ளாமல், பூஜை செய்த பின், பார்வதி அம்மையுடன் எழுந்தருளிய சிவபெருமான், விசாரசருமாவுக்கு வரம் அளித்தார், தனக்கு வரும் மாலைகளும், ஆடைகளும், பூஜை பொருட்களும் உமக்கே சொந்தம் என்று அருளினார். அன்று முதல், அவர் சண்டிகேஸ்வரர் என்றழைக்கப்பட்டார். தை மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த, சண்டிகேஸ்வர நாயனாருக்கு, திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, குருபூஜை நடந்தது. பல்வகை திரவியங்களால் அபிேஷகம் செய்து வழிபாடு நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.