பதிவு செய்த நாள்
08
பிப்
2018
11:02
திருத்தணி: திருத்தணி முருகப்பெருமான், 60 ஆண்டுகளுக்கு பின், பட்டாபிராமபுரம் கிராமத்தில், இன்று, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் முருகப்பெருமான், ஆண்டு தோறும் தை மாதத்தில், மலைக் கோவிலில் உள்ள குருக்கள் தெருக்கள், குமார குப்பம், அகூர், தரணிவராகபுரம், மேல்திருத்தணி மற்றும் திருத்தணி ஆகிய பகுதிகளில், தனித்தனியாக ஒரு நாள் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வழக்கம் போல் இந்தாண்டும், மேற்கண்ட ஊர்களில், உற்சவர் முருகப் பெருமான் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், 60 ஆண்டு களுக்கு பின், உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன், திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் கிராமத்தில், இன்று, காலை முதல், இரவு வரை அனைத்து தெருக்களிலும், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை, 6:00 மணிக்கு, அங்குள்ள குளக்கரையில் உள்ள சீரமைக்கப்பட்ட மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. கடந்த, 60 ஆண்டுகளுக்கு முன் வரை, ஆண்டுதோறும், தை மாதத்தில் ஒரு நாள் உற்சவர் முருகப்பெருமான் பட்டாபிராமபுரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஆனால், 60 ஆண்டுகளாக, கிராம பொதுமக்களிடையே போதிய ஒத்துழைப்பு உட்பட பல்வேறு காரணங்களால், உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா வருவது தடைப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முருகர் வீதியுலாவையொட்டி, கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், பல்வேறு வாத்தியங்களுடன் உற்சவர் வீதியுலா வருவதற்கு, கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.