பதிவு செய்த நாள்
16
பிப்
2018
12:02
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அங்காளபரமேஸ்வரி கோவில் மயான சூறைத்திருவிழாவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காளபரமேஸ்வரி கோவிலில், மயான சூறைத்திருவிழா கடந்த, 13ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 14ல், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது. நேற்று, மயான சூறைத் திருவிழாவை முன்னிட்டு காலை, 4:00 மணிக்கு முகவெட்டு எடுத்து மயானத்திற்கு செல்லும் நிகழ்ச்சியும், 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பக்தர்களுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி தொடங்கியது. பக்தர்கள், 70 அடி நீளம் வரை அலகு குத்தியும், எலுமிச்சை பழத்தை உடலில் குத்திக் கொண்டும், சங்கிலி இழுத்தல், தேர் இழுத்தல், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளி வேடம் அணிந்து நேதாஜி சாலையில் உள்ள மயானத்திற்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள், பூசாரியிடம் சாட்டையடி வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மதியம், 1:15 மணிக்கு அலங்காரம் செய்யப்பட்ட தேரில், அம்மன் மயான சூறைக்கு புறப்பட்டார். இந்நிகழ்ச்சியில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், திம்மாபுரம் கிராமத்தில் உள்ள, அங்காளம்மன் கோவில் மயான சூறைத்திருவிழாவில், மதியம் 1:15 மணிக்கு அம்மன் தேரில் புறப்பட்டு தென்பெண்ணை ஆற்றிற்கு சென்றது.