பதிவு செய்த நாள்
02
மார்
2018
12:03
அவிநாசி: திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது.அவிநாசி அருகே, திருமுருகன்பூண்டியில், பிரசித்தி பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டு தேர்த்திருவிழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, கடந்த, 27ம் தேதி, பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. நேற்று, முன்தினம், காலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை, மகம் நட்சத்திரத்தில், முயங்கு பூண்முலை வல்லியம்மையுடன் திருமுருகநாதசுவாமி, வள்ளி தெய்வானை சமேத சண்முகநாதர், விநாயகர் சுவாமிகள் திருத்தேர்களில் எழுந்தருளினர். மாலை, 3:30க்கு, தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் தேர், ரத வீதிகளில் உலா வந்தது. தொடர்ந்து, பக்தர்களின் ’அரோகரா’ கோஷம் முழங்க, ஸ்ரீ சண்முகநாதர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, பக்தர்களுக்கு மத்தியில் அசைந்தாடி, முதல் நிலைக்கு வந்தது. தொடர்ந்து, திருமுருகநாதசுவாமி தேர், ரத வீதிகளில் வலம் வந்தது. இன்றும் தேரோட்டம் நடக்கிறது.