பதிவு செய்த நாள்
03
மார்
2018
01:03
மேட்டுப்பாளையம்: காரமடையில் நடந்த, பந்த சேவை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். காரமடையில் அரங்கநாதர் கோவில் மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தின் முக்கிய நிகழ்வு, பந்தசேவையாகும். தேரோட்டத்தை காணவரும் பக்தர்களை விட, இரண்டு மடங்கு கூட்டம், பந்த சேவை நிகழ்ச்சிக்கு வருவது வழக்கம். நேற்று மாலையில், பந்த சேவை நிகழ்ச்சி துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பந்தத்தை எடுத்து கையில் பிடித்தும், தோளில் வைத்தும் ஆடினர். தேர் செல்லும் வீதிகள் வழியாக கோவிலை அடைந்து, அரங்கநாதப் பெருமாளை வழிபட்டு, நேர்த்திக்கடனை செலுத்தினர்.பக்தர்கள் குறைந்த பட்சம், 10லிருந்து, 75 கிலோ எடை வரையுள்ள தீ பந்தங்களை எடுத்து ஆடி வந்தனர். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த பக்தர்கள், 100 கிலோ எடையுள்ள ராட்சத தீ பந்தத்தை, துாக்கி ஆடி வந்தனர். நுாற்றுக்கணக்கான குழுவினர் ஜமாப் மேளம் அடித்து, காரமடை நகரை அதிரச் செய்தனர்.