வடிவம், அளவு, தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் லிங்க மூர்த்தங்களை நான்காகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர் பெரியோர்கள். அவை: ஆட்யம், ஸுரேட்டயம், அநாட்டயம் சர்வசமம். ஆட்யம் என்பது தன்னுள் 1001 லிங்கங்களைக் கொண்டது; ஆயிரத்தொரு லிங்கம் எனப்படும். ஸுரேட்டயம் என்பது தன்னகத்தே 108 லிங்கங்களைக் கொண்ட நூற்றெட்டு லிங்கம் ஆகும். அனாட்டயம் என்பது முகலிங்கங்கள் மற்றும் முகங்கள் இல்லாததுமாகிய அனைத்து லிங்கங்களையும் குறிக்கும். சர்வசமம் என்பது ஒன்று முதல் ஐந்து முகங்களைக் கொண்ட லிங்கங்கள் ஆகும். முகலிங்கங்களை வழிபடுவதால் இம்மையில் அஷ்ட ஐஸ்வரியங்களும் மறுமையில் சிவப்பேறும் வாய்க்கும் என்கின்றன ஞானநூல்கள். முகலிங்கங்களில் தோன்றும் முகங்கள் சிவனாரின் வடிவங்களான சத்யோஜாதர், அகோரர், தத்புருஷர், வாம தேவர், ஈசானர் ஆகிய மூர்த்தங்களைக் குறிக்கும் என்பர்.
முக லிங்கங்களை அமைக்கும்போது பாணப் பகுதியில் முகத்தை மட்டுமே அமைக்க வேண்டும் என்பது விதி. ஆனாலும் காலப்போக்கில் சிவனாரின் மார்பு வரையிலும் உருவம் செதுக்கி அமைக்கும் நிலை தோன்றியது. பொதுவாக நான்கு முகங்கள் கொண்ட லிங்கத்தையே பஞ்சமுக லிங்கமாக அழைக்கும் வழக்கம் உண்டு. நான்கு திசையை நோக்கி அமையும் நான்கு திருமுகங்களோடு உச்சியில் திகழும் வழவழப்பான பகுதியை ஐந்தாவது முகமாகக் கொள்வார்கள். சிவராத்திரி போன்ற தினங்களில் சதுர்முக லிங்கத்தை சதுர்முக ருத்ராட்சத்தால் அலங்கரித்து, நான்கு வேதங்களால் அர்ச்சித்து, வில்வம் அர்ப்பணித்து வழிபட்டால் செல்வ வளத்தோடும், பெரும்புகழோடும் வாழலாம். நேபாளம் பசுபதீஸ்வரர் கோயில், காஞ்சி கச்சபேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் முதலான திருத்தலங்களில் சதுர்முக லிங்கத்தை தரிசிக்கலாம்.