பதிவு செய்த நாள்
21
மார்
2018
12:03
திருச்சி: ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் சுவாமிகளின் உடல், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள ஆசிரம வளாகத்தில், அடக்கம் செய்யப்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள, ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின், 11வது பட்டமாக திகழ்ந்த ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் சுவாமிகள், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.அவரது உடல், ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரையில் உள்ள மடத்தில், நேற்று முன் தினம் இரவு முதல், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அகோபில மடம் ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் வேதாந்தம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜீயர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஜீயர் உடலுக்கு மாலை சாற்றி, அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், 100க்கும் மேற்பட்ட சீடர்களுடன் வந்த நித்யானந்தாவும், ஜீயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.நேற்று பகல், 11:30 மணிக்கு மேல், வேதபாராயணம் பாடப்பட்டு, கூடையில் அமர்ந்த நிலையில், சீடர்களால் தலையில் சுமந்து செல்லப்பட்ட ஸ்ரீரங்க ராமானுஜ மகாதேசிக சுவாமிகள் உடல், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள பெரிய ஆசிரம வளாகத்தில், அடக்கம் செய்யப்பட்டது.