பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
12:04
மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பல்லாயிரக்ககணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.
நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 2வது செவ்வாய் கிழமை சிறப்புவழிபாடு நடத்துவதற்காக, சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுகல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்க ள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான குடும்பத்தினருக்கு தையல்நாயகி அம்மன் குலதெய்வமாகும். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபயனமாக புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை வைத்தீஸ்வரன் கோயில் வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி, மக்கள் சீர்வரிசையுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் ஊர் எல்லையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டுவந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டுக்காக எடுத்துசென்றனர்.