பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
ஓசூர்: ஓசூர் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பலர், கிரேன் மூலம் பறவைக் காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓசூர் ராம்நகரில் பழமையான சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவிலில், மாவிளக்கு மற்றும் பல்லக்கு உற்சவ திருவிழா கடந்த, 24 ல் கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, பக்தர்கள் அலகு குத்தியும், கிரேன் வாகனங்களில் தொங்கியும், நடை பயணமாக கோவிலுக்கு சென்றும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, ஏழு கிராம தேவதை கோவில்கள் மற்றும் பிற பகுதிகளில் இருந்து, பால்குடம், மாவிளக்கு, கரகம், தீச்சட்டி ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் என மூன்று மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இன்று இரவு, 7:00 மணிக்கு, பூமிதி விழா, இரவு, 8:00 மணிக்கு கோட்டை மாரியம்மன் பல்லக்கு ஊர்வலம் நடக்கிறது.