பதிவு செய்த நாள்
09
மே
2018
12:05
வீரபாண்டி: தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி அருகே, தானகுட்டிப்பாளையம், முத்துமுனியப்பன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம், நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, திருமணிமுத்தாறு சென்ற பக்தர்கள், புனிதநீரை குடங்களில் எடுத்துக்கொண்டு, மேள, தாளம் முழங்க, கோவிலுக்கு ஊர்வலம் வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மதியம், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முனியப்பனுக்கு, ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு, சுவாமி திருவீதி உலாவில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பால்குட ஊர்வலம்: ஓமலூர், பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், திரவுபதி அம்மன் ஆகிய கோவில்களில், சித்தரை திருவிழா நடந்துவருகிறது. அதையொட்டி, நேற்று காலை, புதுத்தெரு பிள்ளையார் கோவிலிலிருந்து, பால்குடம் ஊர்வலம் புறப்பட்டது. கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக, கோவிலை அடைந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். அதேபோல், சேலம், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலம் வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று பொங்கல் வைபவம், அலகு குத்துதல், பூங்கரகம் எடுத்தல் நடக்கவுள்ளது.