பதிவு செய்த நாள்
11
மே
2018
10:05
கிருஷ்ணகிரி: சூளகிரி அடுத்த, நஞ்சாபுரம் கிராமத்தில், கங்கம்மாதேவி திருவிழாவையொட்டி, 2,000 ஆடுகள், 10 ஆயிரம் கோழிகளை பலியிட்டு, அவரவர் உறவினர்களுக்கு, மக்கள் விருந்து வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த, நஞ்சாபுரம் கிராமத்தில், கங்கம்மாதேவி திருவிழா, ஐந்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் துவங்கிய இந்த விழா, இரண்டு நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம், நஞ்சாபுரம், மாரண்டப்பள்ளி, தொட்டூர், பீளாளம், பின்டேகானப்பள்ளி, புலியரசி மற்றும் ஜோகர்பாளையம் ஆகிய, ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சுவாமிக்கு, இனிப்புகளை படையல் வைத்து, வழிபட்டனர். நேற்று, அதிகாலை நடந்த குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குரும்பர் இன மக்கள், கரகம் சுமந்து ஊரைச் சுற்றி வலம் வந்தனர். பின், தலையில் தேங்காய் உடைத்து வேண்டுதல் நிறைவேற்றினர். விழாவில், 2,000 ஆடுகள், 10 ஆயிரம்கோழிகளை பலியிட்டு, அவரவர் உறவினர்களுக்கு, மக்கள் விருந்து வைத்தனர்.