பதிவு செய்த நாள்
15
மே
2018
11:05
திருவாலங்காடு: திரவுபதியம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருவாலங்காடு ஒன்றியம், கூளூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலையில், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மதியம், மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடந்தது. முக்கிய நிகழ்வாக, 7ம் தேதி, சுபத்திரை கல்யாணம், நேற்று முன்தினம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று மாலை, கூளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 700க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து அக்னிகுண்டத்தில் இறங்கி தீ மிதித்தனர். பின், உற்சவர் அம்மன் டிராக்டரில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், தோமூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்தனர்.