பதிவு செய்த நாள்
22
மே
2018
01:05
பள்ளிப்பட்டு: பழமையான கோவில் குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என்ற, பக்தர்களின் கோரிக்கையையடுத்து, சீரமைப்பு பணி நடக்கிறது. படித்துறையை ஒழுங்குபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிப்பட்டு ஒன்றியம், கரிம்பேடு கிராமத்தில், கொற்றலை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ளது ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவில்.மிகவும் விஸ்தீரனமான இந்த கோவிலின் எதிரே, மிகப்பெரிய குளம் உள்ளது.
திருமண வைபவங்கள்: வடக்கில் மலையும், தெற்கில் கொற்றலை ஆற்றையும் அரண்களாக கொண்ட இந்த குளம், ஆண்டு முழுவதும் நீர் நிறைந்து காணப்படும். அதில், எப்போது அல்லியும், தாமரையும் மலர்ந்திருக்கும் என்பதுa மேலும் சிறப்பு. நகரி – பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், கோவிலின் பெருமை கருதி, பலரும் இங்கு திருமண வைபவங்களை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பலரும் திருமணங்களை நடத்த முன்வரும் பட்சத்தில், மண்டப இடவசதி போதுமானதாக இருப்பது இல்லை. இதை கருத்தில் கொண்டு, 1970களில், குளக்கரையில் புதிய திருமண கூடம் கட்டப்பட்டது. இது தவிர, கிராமத்தில், பல்வேறு தனியார் திருமண மண்டபங்களும் அமைந்துள்ளன. மாவட்டத்தின் கோவில் நகரமான திருத்தணிக்கு அடுத்தபடியாக, அதன் இணை கோவிலான நாதாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ள கரிம்பேடும், திருமண தலமாக புகழ்பெற்றுள்ளது.
28 லட்சம் ரூபாய்: இந்நிலையில், கோவில் குளம் பல ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படாததால், பக்தர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். குளத்தில் தேங்கிய பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை வருவது குறித்து நமது நாளிதழில் பல முறை செய்தி வெளியாகி உள்ளது. இதையடுத்து, குளக்கரைக்கு கம்பி வேலி அமைத்து, பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது, குளத்தை துார் வாரும் பணியை, திருத்தணி தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 28 லட்சம் ரூபாய் மதிப்பில், குளத்தை துார் வாருதல் மற்றும் சீரழிந்து கிடக்கும் படித்துறையை புதுப்பிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, குளத்தில் பம்ப் செட் அமைத்து, தண்ணீரை வெறியேற்றுதல் மற்றும் தாமரைகளை அகற்றும் பணிகள் நடக்கின்றன. இப்பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.