பதிவு செய்த நாள்
06
ஜூன்
2018
10:06
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில், நேற்று, இடி தாக்கியதில், கேரளாந்தகன் நுழைவு வாயில் சிற்பம் சேதமடைந்தது. தஞ்சாவூரில்,நேற்று மாலை, திடீரென பலத்த மழை பெய்தது. மழையுடன், இடி, மின்னல் ஏற்பட்டது. இதில், தஞ்சாவூர் பெரிய கோவில் நுழைவு வாயிலில் உள்ள, கேரளாந்தகன் திருவாயில் கோபுரத்தில் இடி தாக்கியுள்ளது. இதனால், கோபுரத்தின் உச்சியில், கலசங்களுக்கு அருகே உள்ள சுதைச் சிற்பமான வலது புற கீர்த்தி முகத்தில், சிறு பகுதி சேதமடைந்தது. அதை ஒட்டி, இடி தாக்கி இருந்ததால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. சில கற்கள் மட்டும் கீழே விழுந்தன.இடி தாக்கியபோது, கோபுரத்தின் அருகில், காலணி வைப்பகத்தில் இருந்த குளிர் சாதனப் பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டு, மின் தடையும் ஏற்பட்டது. 2010ல், ராஜராஜன் நுழைவு வாயிலில், இடி தாக்கி கலசம் சேதமடைந்தது. 2011ல் பெருவுடையார் சன்னதியில், இடி தாக்கி விரிசல் ஏற்பட்டது.