பதிவு செய்த நாள்
05
ஜூன்
2018
05:06
ஆத்துார்: கோவிலில் வழிபாடு செய்ய வரும் பக்தர்களுக்கு, புண்ணாக்கு பிரசாதம் வழங்கியதற்கு ஆதாரமாக, கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை, வெள்ளிக்கவுண்டனுார் என்ற இடத்தில், கி.பி., எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்த, செக்கு கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சேலம் வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன்.வெங்கடேசன், மன்னன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த, 2ல், புழுதிக்குட்டை பகுதியில் உள்ள, கரியராமர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டபோது, கல் செக்கில் ஒரு கல்வெட்டு கண்டறிந்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, வரலாற்று மைய ஆய்வாளர்கள் கூறியதாவது: தரையிலிருந்து, கல் செக்கானது, 40 செ.மீ., உயரம் உள்ளது. செக்கின் உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில், 12 வார்த்தைகளில் கல்வெட்டு எழுத்துகள் உள்ளன. இவை, எட்டாம் நுாற்றாண்டை சேர்ந்தவை. விளக்கமாறன், தன் மகன் மூக்கனன் இறந்து விட்டதால், அவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இது. இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு, பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்று துண்டுகள் தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு வாசகத்தில், ஸ்ரீவிளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனாற்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று என்று எழுதப்பட்டுள்ளது. பழங்காலத்தில், நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணையை எடுத்துக்கொண்டு, கல்செக்கு கூலியாக புண்ணாக்கை தரும் வழக்கம் உண்டு. இப்போது கண்டறியப்பட்டுள்ள, கல்செக்கு கல்வெட்டு மூலம், இங்கு வந்து வழிபடுவோருக்கு பிரசாதமாக, பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தர சொல்லியிருப்பது ஒரு புதிய தகவலாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.